சரமாரியாக கேள்வி எழுப்பிய மக்கள்...பாதியிலேயே எழுந்து சென்ற பொன்முடி...!

சரமாரியாக கேள்வி எழுப்பிய  மக்கள்...பாதியிலேயே எழுந்து சென்ற பொன்முடி...!
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அமைச்சர் பொன்முடி பாதியிலேயே எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கிராம சபை கூட்டம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரபாண்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டார். அவருடன் ஊரக வளர்ச்சி துறை, நிர்வாக துறை அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறைகளை கேட்டறிந்த அமைச்சர்:

கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்து கொண்டிருந்தபோது, வீரபாண்டி கிராமத்தின் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடைபெறும் பணிகள் குறித்து தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டினார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிராம சபைக் கூட்டத்தில் பொது பிரச்னைகளை மட்டுமே பேசுமாறு அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டார்.

பாதியிலேயே சென்ற அமைச்சர்: 

இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்ட போது, கழிவு நீர் கால்வாய், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக அடுக்கடுக்காக முன்வைத்தனர். இதனால் மேலும் பதற்றமான சூழல் உருவான நிலையில், மக்களின் கேள்விக்கு அரசு அலுவலர்கள் பதில் சொல்வார்கள் என்று சொன்ன அமைச்சர், அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். கிராமசபைக் கூட்டத்தில் இருந்து அமைச்சர் பாதியில் புறப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் மகளிருக்கான இலவச பேருந்தை ஓசி பேருந்தில் செல்கிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com