டெல்லிக்கு இணையாக, தென்னகத்தில் உருவான தாஜ்மஹால்: ஆனால் இது காதலிக்காக அல்ல!

டெல்லிக்கு இணையாக, தென்னகத்தில் உருவான தாஜ்மஹால்: ஆனால் இது காதலிக்காக அல்ல!

திருவாரூர்: திருவாரூரில், பெற்ற தாய்க்காக, பிரமாண்ட நினைவு இல்லமாக, தாஜ் மஹாலையே காட்டியுள்ளார் ஒரு தொழிலதிபர்.

1600-களின் காலகட்டங்களில் மொகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டி எழுப்பட்டதே இந்த பிரமாண்ட தாஜ்மஹால். உலகமெங்கும் உள்ள காதலர்கள், தாஜ்மஹால் போன்ற பரிசுப் பொருட்களை வழங்கி தங்கள் காதலை வளர்த்துக் கொள்பவர்கள் மத்தியில் பெற்ற தாய்க்காக மற்றொரு தாஜ்மகாலைக் கட்டியுள்ளார் பாசமுள்ள மகன் ஒருவர். 

திருவாரூர் அருகே அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஷேக்தாவீது - ஜெய்லானிபீவி தம்பதி. இவர்களுக்கு அமுர்தீன் என்ற மகன் உள்ள நிலையில் அவர் சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுர்தீனின் தாயார் ஜெய்லானிபீவி உடல்நலம் சரியில்லாமல் இறந்து போன நிலையில், அவருக்கு பிரமாண்ட நினைவு இல்லம் கட்ட நினைத்தார் அமுர்தீன்.


அந்த வகையில் டெல்லி ஆக்ரா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் போலவே தென்னகத்தில் தன் தாய்க்கு ஒரு தாஜ்மஹாலை அமைக்க வேண்டும் என முடிவெடுத்த அமுர்தீனின் பெரும் பொருட்செலவில், இந்த தாஜ் மஹாலை கட்டியுள்ளார். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில் 46 அடி உயரத்தில் 10 மினார்களுடன் மொத்தம் 5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் ஆக்ரா தாஜ்மஹாலையே பிரதியெடுத்தது போல காட்சியளிக்கிறது. முகலாயர்கள் காலத்தில் உள்ள கட்டமைப்பைப் போல ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு, அவற்றை உபயோகித்துள்ளார்.

மேலும், உள்ளே, தாயார் ஜெய்லானிபீவிக்கு, ஜூம்மா மசூதியும் அமைத்துள்ளார். இந்த தாஜ்மஹால் கட்டிடத்தை கடந்த 2-ம் தேதியன்று திறந்து, அதனை பொதுமக்கள் பார்வைக்கும் அனுமதிதுள்ளார். இந்த தாஜ் மஹாலை காண வருவோர்க்கு, நாள்தோறும் அன்னதானமும் ஏற்பாடு செய்துள்ளார். 

பெற்ற தாய்க்காக,  தனது அன்பை பொழிந்து கட்டிய இந்த தாஜ் மஹாலை, நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.