
தமிழகத்தில் பருவமழை துவங்கியது முதலே வெளுத்து வாங்கத் தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் ஆறு, ஏரி, அணைகள் நிரம்பியுள்ளன. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆன்மீகவாதிகளும், சாமியார்களும் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்தும் தங்களுக்கு தெரிந்தவற்றை கூறுவது உண்டு. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் தமிழகத்தில் 3 மாதத்தில் பெரும் பிரளயம் ஏற்படும் என்றும், அதன் பிறகு நிலைமை சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா. இவர் காளிமாதா அகில இந்திய யுவ மோட்சா தர்மசார்யா பட்டம் பெற்றவர். இவர் திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்து இருந்தார். சொகுசு காரில் வந்தார். தலைமுடியிலும் சாயம் அடித்திருந்தார்.
திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகில் உள்ள காளி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். முன்னதாக அவர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசி வழங்கினார். சிறுவயதில் காளிமாதா மீது எனக்கு பக்தி ஏற்பட்டது. அதுமுதல் காளிமாதா வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இரவில் மயானம் சென்றும் வழிபாடு செய்வேன்.
உலகில் அதர்மம் தலைதூக்கும்போது சிவன், காளியை அவதாரம் எடுக்க செய்வார். உண்ணாமலை அம்மன் போல் காளியும் சிவனுக்கு மிகவும் விருப்பமானவள். அண்ணாமலையார் உத்தரவின்பேரில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் சென்று வந்துள்ளேன். உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழ்நிலை உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.