மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு....! திறந்து வைத்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்...!

தூத்துக்குடி மாவட்டம், ஆழிகுடியில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது 40 வயது மகனுடன் குடியிருந்து வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, வீடு கட்டுவதற்கான அரசாணை வழங்கி, அது முடிக்கப்பட்ட நிலையில், இன்று அதனை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீடு....!  திறந்து வைத்து மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்...!

மாற்றுத்திறனாளி பெண்: 

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. மாற்றுத்திறனாளியான இவருக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உதயகுமார் என்ற 40 வயது மகன் உள்ளார். பானுமதியின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை   நம்பியிருந்த இந்த குடும்பம் கடந்த 8 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

1986 ஆம் ஆண்டு அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் தற்போது வரை பானுமதி தனது மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மகனுடன் குடியிருந்து வந்தார். வீட்டின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து இருந்தது. மேலும் சில சிமெண்ட் தளங்கள் பெயர்ந்து விழும் நிலையில் இருந்தது.

நடவடிக்கை : 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2021 ஆண்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் வந்து புதிதாக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார். மேலும் அந்த இடத்திற்கு பட்டாவையும் வழங்கினார். இந்த நிலையில் வீட்டின் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது கேட்டறிந்தும் வந்தார்.

இந்நிலையில் வீடு கட்டும் பணிகள் நிறைவடைந்து, வீட்டின் முன்புறம் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை திறக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வருகை புரிந்தார். அவரை அப்பகுதி மக்கள் வரவேற்றனர். அவர் மாற்றுத்திறனாளி பெண் பானுமதியிடமும், அவரது மகன் உதயகுமாரிடமும் " தற்போது புதிதாக வீடு கட்டப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? "என்று கேட்டார். அதற்கு அவர், " மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பத்திரிக்கையாளர்களால் தான் எனக்கு இந்த வீடு கிடைத்தது. அவர்களுக்கும் உங்களுக்கும் எனது நன்றி " என தெரிவித்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை வழியாக சென்று வீட்டை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.