இந்தி எதிர்ப்பு....! அன்று முதல் இன்று வரை!! நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்!

இந்தி எதிர்ப்பு....! அன்று முதல் இன்று வரை!! நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்!

இந்தி திணிப்புக்கு எதிராக உயிர் நீத்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வது வேதனை அளிக்கிறது. தாய் மொழியாம் தமிழ் மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் பட்டியல் இதோ...

நீளும் மொழிப்போர் தியாகிகள் பட்டியல்:

1. இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் முதல் களப் பலியானவர் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த நடராஜன். 1939-ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் சிறைக்கு சென்று 1939-ம் ஆண்டு ஜனவரி15-ம் தேதி உடல்நலக் குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். 

2. இரண்டாவது பலியாக உயிர் நீத்தவர் தாளமுத்து. மொழிப்போராட்டத்தில் சிறைக்கு சென்ற இவர் கும்பகோணம் சிறையில் 1939-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி உயிரிழந்தார்.

3. 1964-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த சின்னசாமி, திருச்சி ரயில் நிலையம் அருகே தீக்குளித்து உயிரிழந்தார்.


4. தமிழ் மொழி மீது கொண்ட பற்றாலும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், 1965-ஆண்டு ஜனவரி 25-ம் தேதி மாணவர்கள் முன்னெடுத்த மாபெரும் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. இதில், 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதியான அதே நாளில்  மாநகராட்சி ஊழியரான சிவலிங்கம் சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இதையும் படிக்க: ஆளுநரிடம் புகார் அளித்த ஈபிஎஸ்...பதிலடி கொடுத்த அமைச்சர்! 

5. மறுநாள் அதாவது 1965 ஜனவரி 26-ம் தேதி விருகம்பாக்கத்தை சேர்ந்த அரங்கநாதன் என்பவர்  தீக்குளித்து உயிரிழந்தார். 

6. அதே நாளில் புதுக்கோட்டையை சேர்ந்த முத்து என்பவர் விஷம்  அருந்தி தற்கொலை செய்து கொண்டார். 

7. இதனால் 1965-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி போராட்டம் தீவிரமடைந்தது. ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில், மாணவர் ரவிச்சந்திரன் பலியானார். இதன் காரணமாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவம் களத்தில் இறங்கியது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பின்னர் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என ஆட்சியாளர்கள் அறிவித்தனர். இதனால் மொழிப்போராட்டம் ஓய்ந்திருந்தது. ஆனால் தற்போது, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 57 ஆண்டுக்ளுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பலி நிகழ்ந்துள்ளது. 

8. 2022- நவம்பர் 26-ம்  தேதியில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தாழையூரை சேர்ந்த தங்கவேல் என்ற 85 வயது முதியவர் தீக்குளித்து இன்னுயிர் நீத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.