இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் எனவும், இது வரும் 16-ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் 55கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.