ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது!

ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது!

சென்னையில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர்களின் கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்வதற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து விற்பனை செய்து வரும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ரயில் மூலம் கஞ்சா கடத்தி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால் ரயில்வே இருப்பு பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

ரயில்வே கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் நடைமேடைகளில் சுற்றி திரியும் சந்தேகத்திற்கு இடமான நபர்களை ரயில்வே போலீசாரும் இருப்பு பாதை காவல் துறையும் சோதனைகள் மேற்கொண்டு வந்தனர். இன்று காலை ஹௌரா மெயிலில் இருந்து வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் மறைந்து சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு முரணாக பதிலளிக்கவே அவர் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்ட போது அதில் கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. 

அவர் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சின்ன தம்பி என்பதும் ஆந்திராவில் இருந்து 6 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பெரியமேடு காவல் நிலையத்தில் கஞ்சாவையும் வாலிபரையும்  இருப்பு பாதை போலீசார் ஒப்படைத்துள்ளனர். பெரியமேடு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: இருப்பா... காரை பார்க் பண்ணிட்டு வந்துடறேன்!