மகளிர் உரிமை தொகை: "திமுக கார்டு வைத்திருந்தால்தான் ஆயிரம் ரூபாய்" அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

மகளிர் உரிமை தொகை: "திமுக கார்டு வைத்திருந்தால்தான் ஆயிரம் ரூபாய்" அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

திமுக கார்டு  வைத்திருந்தால்தான் ஆயிரம் ரூபாய். அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் பணம் இல்லை என  மகளிர் உதவி தொகை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாநாட்டின் தீர்மான குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தீர்மானக்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களுமான ஜெயக்குமார் , பெஞ்சமின், பொன்னையன், செம்மலை, மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கின்ற நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின்  ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் அதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார். இன்று அவருக்கு ஏ க்ளாஸ் வகுப்பு தரப்பட்டுள்ளது. சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டு வருகிறது. சிறை மருத்துவமனை அருகிலேயே வசந்த மாளிகை போல செந்தில் பாலாஜிக்கு வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. சிறை விதிகளை மீறி செந்தில் பாலாஜிக்கு இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதை அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். சிறைக்குச் சென்ற பின்னும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார். இது  தண்ட செலவு. மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறது. இதனால்தான் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதை செய்வதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது கூட 12 பேரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார் எனவும் அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சரவையில் இருந்து நீக்கிவிடுவார் என குறிப்பிட்ட அவர், அந்த தைரியம் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் தமிழகத்தில் ஆட்சியே கவிழ்ந்துவிடும் என குறிப்பிட்ட  ஜெயக்குமார், அவருக்கு திமுகவை பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும் என்பதால் முதல்வர் கோழையாக பயந்து கொண்டு ஆட்சி பறிபோய்விடும் என்று அவரை அமைச்சரவையில் வைத்திருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

 மேலும், தேர்தல் நேரத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் என்று வாக்குறுதியை  முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் என சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், அதன்படி 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு 1008 விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள் என விமர்சித்த அவர், திமுக கார்டு  வைத்திருந்தால்தான் ஆயிரம் ரூபாய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் பணம் இல்லை என்று கூட கூறுவார்கள் எனக் கூறினார்.

தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்றால் திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒன்றிய வட்ட மாவட்ட செயலாளர்கள் யாரை காட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் வழங்கப்படுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாத குடும்பத் தலைவிகள் நிச்சயமாக அவர்களின் கோபத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கச் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:இனி நெல்லை மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்...!