கொள்கையிலிருந்து மாறிய டிடிவி...அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில்...பாலசுந்தரம் பரபர!

கொள்கையிலிருந்து மாறிய டிடிவி...அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில்...பாலசுந்தரம் பரபர!

டிடிவி தினகரன் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கி உள்ளதாகவும், சசிகலா - டிடிவி தினகரனுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில்  நாங்கள் பலியாக விரும்பவில்லை  என்பதாலும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக மாவட்டச் செயலாளர் பாலச்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைவு:

அமமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலச்சுந்தரம், கிழக்கு மாவட்டச் செயலாளர் அய்யனார் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற மாவட்டச் செயலாளர்கள்:

இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து அவர்கள் வாழ்த்து பெற்றனர். 

உண்மையான அதிமுக எடப்பாடி தான்:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுந்தரம், தாங்கள் அனைவரும் தற்போது தான் உண்மையான அதிமுகவில் இணைந்துள்ளதாக கூறிய அவர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொள்கையிலிருந்து மாறிய டிடிவி:

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்வேன் என்று கூறிவந்த டிடிவி தினகரன், தற்போது தனது கொள்கையிலிருந்து மாறுபட்டு செயல்படுகிறார் என்றும், சசிகலா - டிடிவி தினகரன் இடையே நடக்கும் சண்டைக்கு நாங்கள் பலியாக விரும்பவில்லை, அதனால் தான் அமமுகவிலிருந்து விலகி உண்மையான அதிமுகவில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஓபிஎஸ் உடன் இணையும் டிடிவி:

மேலும், சசிகலாவுக்கு ஆதரவான தொலைக்காட்சியில் கூட டிடிவியின் செய்திகளை ஒளிபரப்புவது இல்லை என்று கூறிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கட்சியை பிளவு படுத்திய ஓபிஎஸ் உடன் டிடிவி இணைந்து வருகிறார் என்று பாலசுந்தரம் விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com