களேபரங்களுடன் நிறைவடைந்த அதிமுக பொதுக்குழு... ஜூலை-11ல் மீண்டும் கூடும் என அறிவிப்பு!!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கூடிய அதிமுக பொதுக்குழு களேபரங்களுடன் நிறைவடைந்தது. ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுப்பதற்காக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

களேபரங்களுடன் நிறைவடைந்த அதிமுக பொதுக்குழு... ஜூலை-11ல் மீண்டும் கூடும் என அறிவிப்பு!!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுகவினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு கூடியது.

சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றை வைத்திருந்த உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி வாகனம் வந்த வழியெங்கும் தொண்டர்கள் பூக்களை தூவியதுடன், பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என்ற முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர்.

அதேசமயம் ஓபிஎஸ்சுக்கு இத்தகைய வரவேற்புகள் அளிக்கப்படாததுடன் மண்படத்திற்கு வந்த அவரை வரவேற்பதை முன்னாள் அமைச்சர்கள் தவிர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 23 தீர்மானங்களை முன்மொழியுமாறு ஓபிஎஸ்சுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் உடனடியாக மைக்கில் பேசிய சி.வி சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் ஆவேசமாக கூறினார்.

பின்னர் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோரும் இபிஎஸ் தலைவராக வரவேண்டுமென்று வலியுறுத்தியதுடன், ஓபிஎஸ் பெயரை வேண்டுமென்ற உச்சரிக்காமல் தவிர்த்தனர்.

இந்த சூழலில் ஓபிஎஸ் மேடையில் இருந்து கீழே இறங்கினார். அப்போது ஓபிஎஸ் ஆதரவு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சட்டத்திற்கு புறம்பான இந்த பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறியதுடன் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

ஓபிஎஸ் மேடையில் இருந்து கீழே இறங்கிய போது அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்களை வீசினர். மேலும் மண்டபத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஓபிஎஸ் வந்த பிரச்சார வாகனத்தின் டயர்களும் பஞ்சராக்கப்பட்டன.

இதனையடுத்து அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக வேறோரு காரில் அனுப்பி வைத்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்சுக்கு பூங்கொத்துகள் கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வெள்ளி கிரீடம் அணிவித்தும் வாள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.