ஊதியத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்கிய அதிமுக கவுன்சிலர்!

ஊதியத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்கிய அதிமுக கவுன்சிலர்!

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியத்தை அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன்,  மாநகராட்சி நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு வழங்கி அசத்தியுள்ளார். 

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களின் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜூலை மாதம் முதல் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூபாய் 15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படவுள்ளது.

அதேபோல, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ருபாய் 15,000, துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 5000 மதிப்பூதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் 10,000, துணைத் தலைவர்களுக்கு ரூபாய் 5,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் 2,500 மதிப்பூதியமாக வழங்கப்படவுள்ளது. 

இந்நிலையில் சென்னை மாநகராட்சி 145 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சத்தியநாதன், தனக்கு வழங்கப்படவுள்ள மாதாந்திர மதிப்பூதியத்தை சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் இரவு நேர காப்பகங்களுக்கும், மாநகராட்சி நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட முதியோர் இல்லத்துக்கும் வழங்கியுள்ளார். 

ஜூலை 2023 முதல் பிப்ரவரி 2027 வரை தனக்கு வழங்கப்படவுள்ள மதிப்பூதியத்தை இரவுநேர காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லதுக்கு வழங்குவதற்கான ஆவணத்தை சென்னை ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாங்கினார்.

ஆவணத்தை பெற்றுக்கொண்ட ஆணையர் ராதாகிருஷ்ணன், மற்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட மாமன்ற உறுப்பினர் சத்தியநாதனை பாராட்டினார்.

இதையும் படிக்க:விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்... வயலில் கிடைத்த வைரம்!!