நேற்று தொண்டர்கள் கடலில் மிதந்த அலுவலகம்...இன்று வெறிச்சோடி கிடக்கிறது...!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் நேற்று தொண்டர்கள் கடலில் மிதந்த சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் இன்று ஒருவருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

நேற்று தொண்டர்கள் கடலில் மிதந்த அலுவலகம்...இன்று வெறிச்சோடி கிடக்கிறது...!

வரும் 23ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக கடந்த 14ம்தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்பொது கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பாலோர் வலியுறுத்திய நிலையில், இதனை எதிர்பாராத இபிஎஸ்-ஓபிஎஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  இதைத்தொடர்ந்து இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தீர்மானம் குறித்த இறுதிக்கூட்டம் நேற்று நடைபெற இருந்த நிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருதரப்பினர் ஒற்றைத் தலைமை குறித்து வலுவான கோரிக்கையை முன்வைத்தனர். தொடர்ந்து ஆர்ப்பரித்தும் ஆராவாரத்துடன் கோஷம் எழுப்பியும் ஒலிப்பெருக்கியால் கோரிக்கையை வலியுறுத்தியும் ராயப்பேட்டை அலுவலகமே நேற்று தொண்டர்கள் கடலில் நிறைந்தது.

தாக்குதலுக்கு உள்ளாகி பலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் தடைபட்டதால், இன்று தீர்மானத்தின் இறுதிக்கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அலுவலகமே வெறிச்சோடி காணப்படுகிறது.