சென்னை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக...! மக்கள் விழித்து கொண்டதாக பேட்டி..!

சென்னை மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக...! மக்கள் விழித்து கொண்டதாக பேட்டி..!

மின் கட்டண உயர்வை கண்டித்து  அதிமுகவினர் சென்னை மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம்:

சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் இன்று நடைபெற்றது.   இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வெளிநடப்பு செய்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்:

மாநகராட்சியின் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, மின்சார கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து  சென்னை மாநகராட்சியின் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

போராட்டம்:

கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், பின்னர் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் பதாகைகள் வைத்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகவும், மின்கட்டணம் மற்றும் சொத்து வரிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக மாமன்ற உறுப்பினர் கே.பி.கே. சதீஷ்:

ஆர்ப்பாட்டத்தையடுத்து,  அதிமுக மாமன்ற உறுப்பினர் சதீஷ், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 
"திமுகவின் 487 வது  வாக்குறுதி படி   கொரோனாவில்  இருந்து மக்கள் முழுவதும் மீண்டும் வரும் வரை சொத்து வரி ஏற்ற மாட்டோம்  என தெரிவித்திருந்தார்கள்.  ஆனால் தற்போது சொத்துவரியை  ஏற்றியுள்ளனர். அதேபோலதான் மின்சார கட்டணத்தையும் ஏற்றி உள்ளதாக கூறினார்.

மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்: 

மக்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவோம் என்று தெரிவித்தார்கள். ஆனால் எந்த இடத்திலும் மின்சாரம் தடை இன்றி கிடைப்பதில்லை. அதேபோன்று, மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் கட்டணம் கணக்கெடுப்பு என்பது நடைபெற்று வருகிறது. இதுபோன்று அவர்கள் அறிவித்த எந்த ஒரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறினார். இந்நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் திமுக உயர்த்தி உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சியைப் பிடித்துள்ளதாக கூறினார்.

இலங்கையின் நிலைமை தமிழ்நாட்டிற்கு வரும்:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு தான் கடைசியாக மின்சாரம் கட்டணம் என்பது உயர்த்த பட்டது. அதற்கு பிறகு அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம் என்பது ஏற்றபட வில்லை. ஆனால், தற்பொழுது திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் வரி இரண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.  விலை வாசி ஏற்றம் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை தொடந்து உயரப்பட்டால் இலங்கையில் ஏற்பட்ட அதே நிலைமை தான் தமிழ்நாட்டிற்கும் வரும் என்று பேசினார்.

மக்கள் விழித்து கொண்டார்கள்:

மின்சாரம் தடையின்றி வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறி விட்டு தற்போது மின் கட்டணத்தை திமுக உயர்த்தி இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மக்கள் அனைவரும் விழித்து கொண்டார்கள், உடனடியாக ”சொத்து வரி மின்சாரம் கட்டண உயர்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, கடந்த ஜூலை 25 ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சொத்துவரி மற்றும் மின்சார கட்டணம் வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2வது 3வது நாளாக இந்த ஆர்ப்பாட்டம் என்பது தொடர்ந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது, மாநாகராட்சியின் மாதந்திர கூட்டத்திலும் சொத்துவரி மற்றும்  மின்சார கட்டணம் வரி உயர்வை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.