தொடர் ஏ.டி.எம் கொள்ளை...அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்...9 தனிப்படைகள் அமைப்பு!

தொடர் ஏ.டி.எம் கொள்ளை...அடுத்தடுத்து வெளியாகும் சிசிடிவி காட்சிகள்...9 தனிப்படைகள் அமைப்பு!

திருவண்ணாமலையில் நிகழ்ந்த தொடர் ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் காரிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிலிருந்து, வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதும், வேலூர் வழியாக, ஆந்திர பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : கணவனை விட்டுவிட்டு... கடத்திய பெற்றோரிடமே செல்ல விருப்பம் தெரிவித்தார் கிருத்திகா பட்டேல்...!

இதனிடையே திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளையில் ஹரியானாவைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் நூக், மேவட், பால்வால் உள்ளிட்ட மாவட்டத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை தனிப்படை போலீசார் விரைந்து பிடித்து விடுவார்கள் என்றும்,  வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,திருவண்ணாமலை ஏ.டி.எம்.  கொள்ளை சம்பவத்தில், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.