வெளிமாநில நபர்களின் ஆதார் சேகரிப்பு...சென்னை காவல்துறை முன்னெச்சரிக்கை... 

வெளிமாநில நபர்களின் ஆதார் சேகரிப்பு...சென்னை காவல்துறை முன்னெச்சரிக்கை... 

பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்துள்ள வெளிமாநில நபர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சேகரிக்கும் பணியில் தொழிலாளர் நலத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஈடுபட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு காரணங்களை வைத்து சென்னைக்கு வரும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 424 வெளி மாநில நபர்கள் மற்றும் 96 வெளிநாட்டவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் 396 வெளிமாநிலத்தவர்கள் மற்றும் 82 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குற்ற வழக்குகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஈடுபடும் வட மாநில நபர்களை அடையாளம் காணுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வரும் வெளிமாநில நபர்களின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தொழிலாளர் நலத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உதவியுடன் சேகரித்து வருவதாக சென்னை காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிமாநில நபர்களை பணிக்கு அமர்த்தும் தனிநபர்களும், நிறுவனங்களும் வேலைக்கு எடுக்கும் வெளிமாநிலத்தவரின் ஆதார், கைரேகை போன்ற ஆவணங்களை வைத்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் பிற மாநில பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களையும் வீட்டின் உரிமையாளர்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விடுதி அறைகள், ஹாஸ்டல்களில் தங்கும்  வெளிமாநில நபர்களை தொடர்ந்து  சோதனைக்கு உட்படுத்தி கண்காணித்து வருவதாகவும், தெருக்களில் பெட்ஷீட், பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபடும் வடமாநில நபர்கள் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களா என சோதனை செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நேபாள நாட்டைச் சேர்ந்த 20 பேர் குற்ற வழக்குகளிலும், ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலும் ஈடுபடுள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட நாட்களைத் தாண்டி சென்னையில் தங்கும் வெளிநாட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.