ஸ்டேன் சுவாமி மீது சட்ட மீறல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது: மத்திய அரசு விளக்கம்

சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மீது சட்ட மீறல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஸ்டேன் சுவாமி மீது சட்ட மீறல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது: மத்திய அரசு விளக்கம்

எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்ட,
திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, பழங்குடியின மக்களின்  வாழ்வியல் உரிமை பிரச்சனைக்காக குரல் கொடுத்தவர். மராட்டிய மாநிலம் கோரேகான் வழக்கில் இவர் சிறைபடுத்தப்பட்டு பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் அவருக்கு ஜாமின் கொடுக்காமல் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், மும்பை நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார். 

இவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையமும் இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஸ்டேன் சுவாமி மரணம் குறித்து குடியரசு தலைவர்  ராமநாத் கோவிந்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், சரத்பவார், மமதா பானர்ஜி உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதி இருந்தனர். அதில் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்குகளைத் தொடுத்து, அவரை சிறையில் அடைத்து வருத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், உபா எனப்படும் சட்டவிரோத அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறும் அந்த கடிதத்தில்  கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மீது, சட்டபூர்வமான உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சட்ட மீறல்களுக்கு எதிராகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.