மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரி  ஏற்படுத்த நடவடிக்கை :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!!

மயிலாடுதுறை உள்பட மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் கல்லூரி  ஏற்படுத்த நடவடிக்கை :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!!
Published on
Updated on
1 min read

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டமானது கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன் துவங்கிய அவைக்கூட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இன்றைய கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தியாவசிய மக்கள் தேவையை முன்வைத்து பேசினர். 

குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். இதற்கு மத்திய அரசு வழங்கும் மானியமும் கிடைக்காததால், மக்கள் எரிவாயு சிலிண்டருக்காக அதிக ரூபாய் செலவிட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார். எனவே ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதம் ஒன்றுக்கு, 10 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி, 2006ல் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடானது 59 ஆயிரத்து 852 கிலோ லிட்டர் ஆக இருந்ததாகவும், தற்போது அதனை 7 ஆயிரத்து 536 கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் கூறினார். 

இதன் காரணமாக சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு 3 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு ஒரு லிட்டரும் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், முதல்வரிடம் ஆலோசித்து மத்திய அரசிடம் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். 

இதேபோல், மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மயிலாடுதுறை மட்டுமல்லாது மருத்துவ கல்லூரிகள் இல்லாத பிற மாவட்டங்களிலும் கல்லூரி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com