"தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" அமைச்சர் அன்பில் மகேஷ்!

சி ஏ ஜி அறிக்கையின் படி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். 

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி "நவீன தமிழ்நாட்டின் சிற்பி, கலைஞரின் பாதையில் ஒரு பயணம்" என்கிற நிகழ்வு பள்ளிக் கல்வித்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் படி, பள்ளி மாணவர்களை கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது துவக்கி வைக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரடியாக மாணவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில், சென்னை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்டு சென்னையின் முக்கிய இடங்களான வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப் பூங்கா, ஜெமினி மேம்பாலம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ஒன்பது இடங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழி மாணவர்கள் செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய தணிக்கை அறிக்கையில், அதிமுக ஆட்சியின்போது 4.27 கோடி ரூபாய் நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகளுக்கு செய்த செலவு தேவையற்றது எனவும், அதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை என தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஈஈ தேர்வுகள் தொடர்பான வழிகாட்டுதல் அமைக்கும் புத்தகங்கள் 3.15 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தனர். ஆனால், வாங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படாமல் இருந்தது மட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு 2 கோடி ரூபாய்க்கு அந்த புத்தகங்களை மறுகொள்முதல் செய்துள்ளனர். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் செயல்பட்டதாக சி ஏ ஜி அறிக்கை கூறுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், சி ஏ ஜி அறிக்கையின் படி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக காலை 8 மணி முதல் எனது இல்லத்தில் காத்திருந்தேன். ஆசிரியர் சங்கங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் அனைவரும் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் என்னை வந்து சந்திக்க ஊடகங்கள் வாயிலாகவும் அழைப்பு விடுக்கிறேன் எனக் கூறினார். மேலும், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக இன்று நாள் முழுக்க காத்திருப்பேன். அவர்களுக்காக எனது அலுவலக கதவுகள் திறந்தே உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிக்க: அதிக பயணிகளை ஏற்றி சென்ற ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்!