நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவல் செப். 9-ம் தேதி வரை நீட்டிப்பு
வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
இவர்களது நீதிமன்ற காவல் முடிந்ததை அடுத்து, இருவரும் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.