இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்..!

இன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்..!

வாக்காளர் அட்டையுடன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்திருந்தது. அந்த ஆணைப்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்யும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

அனைத்து கட்சிக் கூட்டம்:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆலோசனை நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முதலில் ஈபிஎஸ்க்கு மட்டுமே அழைப்பு இருந்தது. ஈபிஎஸ் தரப்பில்,  பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  

ஓபிஎஸ்க்கு அழைப்பு:


தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் அனுப்பட்டது. அதில் தங்கள் தரப்பையும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பையும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளது. அவர்களின் தரப்பில் இருந்து  எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து இக்கூட்டத்தில் கட்சிகளின் ஆலோசனைகள் பெறப்படவுள்ளது.