முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

உடுமலை அமராவதி அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி எட்டாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் பாசன வசதி பெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 

இதனால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அமராவதி அணை 85 அடிக்கும் குறையாமல் இருந்து வருகின்றது. 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடைவிடாத கனமழை காரணமாக அமராவதி அணைக்கு 10 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து வரத்துவங்கியதால் நள்ளிரவில் அணை முழு கொள்ளளவை எட்டியது.  

அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் எட்டாயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் உபரி நீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.