முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலர்களை மிரட்டிய எஸ்.டி.பி.ஐ பிரமுகர்...வீடியோ வைரல்

முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலர்களை மிரட்டும் எஸ்.டி.பி.ஐ பிரமுகரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலர்களை மிரட்டிய எஸ்.டி.பி.ஐ பிரமுகர்...வீடியோ வைரல்

சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள், பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடைவீதி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுவதால் அங்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தடுப்பதற்காக ஜவுளிக்கடைகள், மார்க்கெட், கடற்கரை, ரயில் நிலையம், மால்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முக கவசம் அணியாதவரிடம் அபராத தொகையை பெற்று வருகின்றனர்.

அதே போல் மண்ணடியில் போலீசார் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராத தொகை பெற்றுள்ளனர். அப்போது  இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த நபரை மடக்கி அபராத தொகை செலுத்துமாறு கூறியுள்ளனர்.  அதற்கு அந்த நபர் தனக்கு மூச்சு கோளாறு பிரச்சனை இருப்பதால் முககவசம் அணியவில்லை என்றும் அபராத தொகை செலுத்த முடியாது எனவும், தனது பெயர் டைகர் அலி எஸ்.டி. பி.ஐ கட்சியில் மாநில செயலாளராக இருந்து வருவதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனை போலீசார் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போது, நானும் வீடியோ எடுப்பேன் எனக்கூறி தனது செல்போனில் பொதுமக்களிடம் 100, 200 என போலீசார் பணம் பறிப்பதாக பேசி வீடியோ எடுத்தார். அதனை தொடர்ந்து அவர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்ற போது போலீசார் வழி மறித்ததற்கு வண்டி மீது கைவைத்தால் பிரச்சனை ஆகிவிடும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.