12ம் நூற்றாண்டு சோழ தேசத்து பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு...

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால இரு பழங்கால சிலைகள் அமெரிக்காவில் உள்ள ஏல மையம் மற்றும் அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
12ம் நூற்றாண்டு சோழ தேசத்து பழமையான சிலைகள் கண்டுபிடிப்பு...
Published on
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு 3 பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை மூலம் விக்ரபாண்டி காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தியபோது, கோவிலில் இருந்த

  1. விஷ்ணு,
  2. தேவி,
  3. பூதேவி,
  4. யோக நரசிம்மர்,
  5. விநாயகர்,
  6. நடன சம்பந்தர்,
  7. சோமாஸ்கந்தர்,
  8. நின்ற நிலையிலான விஷ்ணு,
  9. நடனமாடும் கிருஷ்ணர்

ஆகிய 9 சிலைகளும் திருடப்பட்டு அதற்கு பதிலாக போலியான பிரதிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு இன்ஸ்டியூட் உதவியுடன் திருடப்பட்ட சிலைகளின் புகைப்படங்களைப் பெற்று, அதை ஒப்பிட்டு உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களின் இணையதளம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருடப்பட்டுள்ள விஷ்ணு, தேவி, பூதேவி ஆகிய சிலைகள் இருப்பதையும்,  அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகர் அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் இருப்பதையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஃபிரீயர் சாக்லர் அருங்காட்சியத்தில் ஆத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலையும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். சிலைகள் விஸ்வநாத ஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமானது என்பதை நிபுணர்களும் உறுதிப்படுத்தினர்.

மேலும், திருவாரூர் மாவட்டம் ஆத்தூரில் இருந்து திருடப்பட்ட சோமஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் சிலைகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிலைகள் என்பதும், திருடப்பட்ட சிலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டு 98,500 டாலர்களுக்கு அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்திற்கு விற்கப்பட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் வகையில் உரிய ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தமிழக அரசிடம் சமர்பித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து சிலைகள், தற்போது அமெரிக்கா வாஷிங்டன் அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரு சிலைகள் என மொத்தம் 7 சிலைகளை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com