"அதிமுக வெளியேறிதால் பாஜகவிற்கு எந்தவித பின்னடைவும் இல்லை" அண்ணாமலை உறுதி!

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - திமுக இடையே தான் நேரடி போட்டி என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிதால் பாஜகவுக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்றும் அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல், புதிய கட்சிகளை இணைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் வியூங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது உரையாற்றிய அண்ணாமலை, அடுத்த 7 மாதங்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து பத்திரிகைகளிடம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி  மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வருத்தம் அளிக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, வளர்ச்சியை மட்டும் ஒற்றை இலக்காக கொண்டு செயல்பட்டு பா.ஜ.க. செயல்பட்டு வருவதாகவும், யாரைப் பற்றியும் கவலை இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளதாகவும் கூறினார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் விமர்சனத்திற்கு தேர்தல் முடிவுகள் தக்க பதிலாக அமையும் என்றார். தமிழ்நாட்டில் திமுகவும் – மத்தியில் பாஜகவும் ஆளும் கட்சியாக இருப்பதால் திமுகவுடன் தான் தங்களுக்கு போட்டி என உறுதிபடத் தெரிவித்தார். மத்திய பாஜக அரசின் நலத் திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திப்போம் என்றும் அண்ணாமலை அப்போது கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், டீ  குடிப்பது போல்எல்லாம் கூட்டணி குறித்து பேச முடியாது என்றார். பாஜக தேசிய தலைமை தன்னிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் ஆச்சரியமான முடிவை பாஜக ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிக்க: 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் சரிவிற்கு காரணமான அரசு ஊழியர்கள் போராட்டம்!