”தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிட்டது” என்.ஐ.ஏ. சோதனை குறித்து அண்ணாமலை விமர்சனம்!

”தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிட்டது”  என்.ஐ.ஏ. சோதனை குறித்து அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறியதே என்.ஐ.ஏ சோதனை நடைபெறுவதற்கான முக்கிய காரணம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வேங்கை வயல் தீண்டாமை நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகளை 200 நாட்களுக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : தஞ்சாவூரில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு! முடிவில் கிடைத்த ஆவணங்கள் என்னென்ன?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த 26 மாதங்களில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். தேச விரோதிகளின் புகலிடமாக தமிழகம் மாறியதே என்.ஐ.ஏ., சோதனைக்கு முக்கிய காரணம் என்ற அவர், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் நாள்தோறும் குற்றநிகழ்வுகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். 

இந்தியா குறித்து திமுகவினர் பேசுவது வேடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, மாநிலங்கள் இடையே பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுகதான் என்றும் சாடினார். மேலும், ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, பாஜ.க. கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லை என்றார்.