செஸ் விளம்பரப் படத்தில் நடிக்கவே முதல்வர் ஆர்வம் - அண்ணாமலை விமர்சனம்!

செஸ் விளம்பரப் படத்தில் நடிக்கவே முதல்வர் ஆர்வம் - அண்ணாமலை விமர்சனம்!

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை அவரின் தாய் ஐந்து நாட்களாக வாங்காமல் போராடி வரும் நிலையில், தமிழக முதல்வரோ விளம்பரப் படங்களில் நடித்து வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தால் தற்போது வரை 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பிரதமர் மோடி மேக் இன் இந்தியா சொல்வதாகவும் ஆனால் திமுகவினர் ப்ரேக் இன் இந்தியா என்று சொல்வதாகவும் கூறினார். 

திருப்பூரில் வருகிற 2024 ஆம் ஆண்டிற்கு முன்பாக இ.எஸ்.ஐ மருத்துவனை திறக்கப்படும் அண்ணாமலை உறுதி:

தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் முதல்வரை மேடையில் வைத்து கொண்டே ஒருவர் தனி மாநிலம் பற்றி பேசுகிறார். ஆனால், பிரதமர் மோடி ஐநா சபைக்கு சென்றாலும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அடிப்படையில் தமிழில் தான் பேசுவார் என்று சுட்டிக்காட்டினார். மேலும் திருப்பூரில் வருகிற 2024 ஆம் ஆண்டிற்கு முன்பாக இ.எஸ். ஐ மருத்துவனை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார். 

அதேசமயம் கறிக்கோழி பிரச்சனையில் கோழி வளர்ப்பவர்கள் , முகவர்கள் இடையே தமிழக அரசு 15 நாட்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க களத்தில் இறங்கி கோட்டையை நோக்கி வரவும் தயங்காது என்றும் கூறினார். 

மாப்பிள்ளை அவர் தான் ஆனால் சட்டை என்னோடது’ போல முதல்வர் செய்கிறார்:

தொடர்ந்து, சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ள 'செஸ் ஒலிம்பியாட்டை’ தமிழகத்திற்கு கொண்டு வந்தது பிரதமர் மோடி . ஆனால் அதன் விளம்பர படத்தில் நடிப்பது முதல்வர், ’மாப்பிள்ளை அவர் தான் ஆனால் சட்டை என்னோடது’ என்பது போல முதல்வர் செய்கிறார் என்று விமர்சனம் செய்தார். 

செஸ் விளம்பரத்தில் நடிப்பதில் ஆர்வம்:

அணமையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரத்தில் கடந்த 5 நாட்களாக மாணவியின் உடலை வாங்காமல் அவரின் தாய் போராடி வரும் நிலையில்,  அரசு நேரடியாக வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்ல வேண்டும் என மக்கள் கேட்டுக்கொண்டனர்.  ஆனால் முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில்  குறுக்கும் மறுக்குமாக உள்ளார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.