அண்ணாமலையின் கூற்று அபத்தமானது...! தமிழக காவல்துறை கண்டனம்..!

அண்ணாமலையின் கூற்று அபத்தமானது...! தமிழக காவல்துறை கண்டனம்..!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தமிழக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.அண்ணாமலை கூற்று அபத்தமானது எனவும் காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மத்திய உளவுத்துறை சார்பில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.  

இந்த வழக்கில் சட்ட நடைமுறை கால தாமதமின்றி பின்பற்றப்பட்டு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதாகவும், மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே என்.ஐ.ஏ., விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், போலீசார் மீது அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே, அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அண்ணாமலை கூறுவதுபோல், கோவையில் இந்த சம்பவம் நடைபெறப்போவதாக தகவல் கிடைத்திருத்தால், தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே, குறிப்பிட்ட நபர்களைக் கைது செய்திருக்கும். அவர்களின் வீடுகளை சோதனையிட்டு, வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். இதுபோன்ற உண்மையில்லாத, மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி, தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.