5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஐந்து நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் பாதயாத்திரையை துவக்குகிறார்.

'என் மண் என் மக்கள்' என்ற பெயரில், பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை மூன்றாம் கட்ட யாத்திரையை, இம்மாதம் 16ஆம் தேதி, கோவை மாவட்டம் அவிநாசியில் இருந்து துவங்கினார். அதில், மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். 

அதைத் தொடர்ந்து, 19ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்த போது,  மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்த செய்தி அறிந்ததும், யாத்திரையை ஒத்திவைப்பதாக, அறிவித்தார். ஏற்கனவே, ஆயுத பூஜை, விஜயதசமி விழாவை ஒட்டி, 21ஆம் தேதியிலிருந்து இருந்து 24ஆம் தேதி வரை யாத்திரை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மொடக்குறிச்சியில் பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.இதையடுத்து நாமக்கல், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் யாத்திரையை மேற்கொண்டு, நவம்பர் மாதம் 8ஆம் தேதி திருச்சியில் நிறைவு செய்கிறார்.