
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் இயங்கி வருகிறது.
சுயதொழில், சிறுதொழில் புரிவோர் மற்றும் தொழில் முனைவோர் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கடன் உதவிகளை பெற்று, தொழில் தொடங்க இந்த அலுவலகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு சுயதொழில் தொடங்க வரும் தொழில் முனைவோரிடம் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், பொதுமேலாளர் ரவீந்திரன் மற்றும் உதவிபொறியாளர் கம்பன் ஆகியோர் அறையிலிருந்து கணக்கில் வராத 3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், இருவரின் வீடுகளிலும் நடத்தினர். இதில், லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.