கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு...  4 வாரங்களில் சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவு...

கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் தண்டனையை எதிர்த்து  மேல்முறையீட்டு மனுவுக்கு 4 வாரங்களில் சி.பி.ஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு...  4 வாரங்களில் சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவு...

விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி ஆகியோர் 2003-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விவரம் தெரிந்த குடும்பத்தார் இருவரையும் சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று அங்கு காது மற்றும் மூக்கு வழியாக விஷத்தை செலுத்தி இருவரையும் கொலை செய்து, உடல்களை தனித்தனியாக எரித்திருக்கின்றனர். முதலில் நடவடிக்கை எடுக்காத போலீசார் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போதைய விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகிய 15 பேர் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்பட்டனர். அதில் குணசேகரன் மற்றும் அய்யாசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து முன்னாள் காவல் ஆய்வாளர் செல்லமுத்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரனுக்கு தூக்கு தண்டனையும், ஆய்வாளர் செல்லமுத்து உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி அப்போதைய காவல்துறை ஆய்வாளர் செல்லமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரங்களில்  சி.பி.ஐ  பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.