ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு...!

ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த தமிழக அரசு...!

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட முதல் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் - 1 நீட்டிப்பிற்கான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஆர்டிஐ (RTI) வாயிலாக கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

அதில், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை சுமார் 15.46 கிலோமீட்டர் தொலைவுக்கு 12 உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் பாதைக்கான விரிவான திட்ட அறிக்கையை, கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தமிழ்நாடு அரசின் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  (CMRL) சமர்ப்பித்திருந்தது. 

இதையும் படிக்க : அதிர்ச்சியில் உறையும் ஐ.டி ஊழியர்கள்... பணி நீக்கம் தீர்வாகுமா?

இதனிடையே சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரையில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. உயர்மட்ட சாலை அமைக்கப்படுவது பொறுத்து மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெறும் என்பதால் மாநில நெடுஞ்சாலை துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் - 1 நீட்டிப்பிற்கான திட்ட அறிக்கைக்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

கடந்த 14 மாதங்களாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சென்னையை தொடர்ந்து தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி , திருநெல்வேலி, பெங்களூர் - ஓசூர்  நகரங்களில் மெட்ரோ ரயில்கள் திட்டத்தை செயல்படுத்த அதிகாரக் குழு கூடத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.