அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜகவினர் இடையே தகராறு...அமைச்சர் கார் மீது காலணியை வீசிய பாஜகவினர்!

அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜகவினர் இடையே தகராறு...அமைச்சர் கார் மீது காலணியை வீசிய பாஜகவினர்!

மதுரை விமான நிலையம் வந்தடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ரஜோரி ராணுவ முகாமில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லட்சுமணன் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். தும்மக்குண்டு அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இராணுவ வீரர் லட்சுமணன். இவருக்கு நாட்டின் மீதுள்ள பற்றால் கடந்த 2019ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, தற்போது நாட்டுக்காக தன் உயிரை விட்டுள்ளார். 

விமான நிலையத்தில் அஞ்சலி:

தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த லட்சுமணின் உடல்,  காஷ்மீரில் இருந்து ஹைதராபாத் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில், மறைந்த லட்சுமணனுக்கு தேசியக்கொடி அணிவித்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர்:

விமான நிலையம் வந்தடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வருகை தந்திருந்தார். அப்போது, முதலில் நிதியமைச்சர் அஞ்சலி செலுத்தியபின், பாஜகவினர் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காலணியை வீசிய பாஜகவினர்:

பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது, லட்சுமணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு பி.டி.ஆரின் கார் புறப்பட்டுச் சென்றது. அப்போது, பாஜகவினர் அவர் கார் மீது  காலணியை வீசி எறிந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்திய பின் அமைச்சர் புறப்பட்டார். அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் கூட இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு ராணுவ வீரர்கள் எடுத்துச் சென்றனர்.