ஆலோசனைக்குழு தலைவர் அவர்களே... ஸ்டாலினை சீண்டிய அர்ஜுன் சம்பத்...

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் மு.க.ஸ்டாலினை ஆலோசனைக்குழு தலைவர் என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அர்ஜுன் சம்பத்.

ஆலோசனைக்குழு தலைவர் அவர்களே... ஸ்டாலினை சீண்டிய அர்ஜுன் சம்பத்...
திமுக அரசு பதவியேற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. இதுகுறித்து சட்டசபையில் விவாதம் எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றியம் என்பதற்கான பொருள் என்னவென்று விளக்கம் அளித்ததோடு, அந்த வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்துவோம் என்று அழுத்தம் திருத்தமாக உறுதியுடன் தெரிவித்தார்.
 
இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அர்ஜூன் சம்பத், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை ஆலோசனைக்குழு தலைவர் எனக் அழைக்கலாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக, மத்தியிலுள்ள பா.ஜ. , அரசை, 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து, 'ஒன்றிய அரசு' என்று, தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
 
அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்று தான் அழைக்க வேண்டும் என்றில்லை; அவரை ஆலோசனைக் குழு தலைவர் என்றும் அழைக்கலாம். அவர் கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர் தான். இறுதி முடிவு கவர்னரிடம் தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது. அதனால், இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக்குழு தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்க வேண்டும்” என்றார்.