உயிரையும் பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்திப்பிடித்த ஆயுதப்படை காவலர்... மாவட்ட எஸ்.பி. பாராட்டு...

செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை துரத்திப்பிடித்த ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட எஸ்பி வருண்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

உயிரையும் பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்திப்பிடித்த ஆயுதப்படை காவலர்... மாவட்ட எஸ்.பி. பாராட்டு...

திருவள்ளூர் அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். இவர் தன்னுடைய செல்போனில் பேசிக் கொண்டே ஜே.என்.சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 3 பேர் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஆயுதப்படை காவலர் முருகேசன் இதைப்பார்த்ததும், மோட்டார் சைக்கிளில் வேகமாக துரத்திச் சென்று திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மடக்கி பிடித்த போது, இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்துக் கொண்டு காவலர் முருகேசனை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனை சமாளித்துக் கொண்டு 2 பேரை மட்டும் மடக்கி பிடித்துள்ளார். இதில் ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆயுதப்படை காவலர் முருகேசன் பிடித்து வைத்துக் கொண்டிருந்த 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜாஜிபுரம்  கஜா என்கிற கஜேந்திரன் (22) என்பதும், இவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், மேலும் கோயில் பதாகை, கலைஞர் கருணாநிதி நகர், 3 வது தெருவை சேர்ந்த  மதன்குமார் (22) என்பதும் அவர் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், தப்பியோடியவன் கோயில்பதாகையை சேர்ந்த விஜய் என்பதும் அவர் மீது வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து இமானுவேல் ராஜசேகர் மற்றும் ஆயுதப்படை காவலர் முருகேசன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் தப்பி ஓடிவிட்ட கோவில்பதாகை சேர்ந்த விஜயை தேடி வருகின்றார்.

இந்த சம்பவத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் திருடர்களை துரத்திச் சென்று அவர்களின் கொலைவெறித் தாக்குதலை சமாளித்துக் கொண்டு 2 பேரை மடக்கி பிடித்து செல்போனை கைப்பற்றி வீர தீரச் செயல் புரிந்த ஆயுதப்படை காவலர் முருகேசனை மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தனது அலுவலகத்திற்கு அழைத்து ரூ.1000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.