வெள்ளம் வடிந்த நிலையில், முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் வடிந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்சாரம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

பெரும்பாக்கம் சேகரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழுத்தளவு தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கழுத்தளவு தண்ணீரில் குழந்தையை முதல்நிலை காவலர் நாகராஜ் தோளில் சுமந்தவாறு பத்திரமாக மீட்டார். 

கொரட்டூர் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் வடிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் மின்னல் வேகத்தில் சுத்தம் செய்தனர். கொரட்டூர் காவல் நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் காவலர்கள் சாலையில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு ஆளானதாக செய்தி வெளியிட்ட நிலையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் வந்து ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையும் படிக்க : மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகை...!

கொருக்குப்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் தொடர்ந்து நான்காவது நாட்களாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் எட்டப்படாததால் பொதுமக்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர்,  திருவேணிதெரு, கங்காதெரு, யமுனாதெரு உள்ளிட்ட பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிசலில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.  மேலும் அப்பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.