விடுமுறை நாளில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. வரவேற்ற சாரல் மழை!!

வார விடுமுறை நாளான இன்று கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில், சாரல் மழை பெய்வது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விடுமுறை நாளில் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.. வரவேற்ற சாரல் மழை!!

கோடை  தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது போல், சீசன் தொடங்குவதற்கு முன்பே கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

அதிலும் இன்று வார விடுமுறை நாள் என்பதால், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ரோஜா பூங்கா, நட்சத்திர ஏரி, என கொடைக்கானலின் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக இதமான சாரல் மழை பெய்து வருகிறது.

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி உள்ளிட்டவைகள் நடத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகளை நம்பித் தொழில் செய்வோர் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர். தற்போதைய சூழல் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே உரிய முன்னேற்பாடுகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதனால், வாகன நிறுத்தகம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரைவாகச் செய்து தர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.