"சிபிசிஐடி விசாரணைக்கு பின் பாரம்  குறைந்தது" தனபால் பேட்டி!

கொடநாடு வழக்கில் இன்றைய சிபிசிஐடி விசாரணைக்கு பின் பாரம் பாதியாக குறைந்தது என ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டியளித்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக மறைந்த  ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் விசாரணை வலையத்துக்குள் வருவதற்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனிடையே அவரது சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகினார். சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் வெளியே வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தனபால், சிபிசிஐடியின் எஸ்.பி மற்றும் 4 டி.எஸ்.பி. தலைமையில் விசாரனை நடைபெற்றது. வரும் 26 ஆம் தேதி மீண்டும் ஆஜராக சொல்லியுள்ளனர். விசாரணைக்கு பின் மனதில் இருந்த பாரம் பாதி குறைந்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தனக்கு நிறைவாக இருந்தது. விசாரணையில் வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சம்பந்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை சொல்லியுள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி, ஆத்தூர் இளங்கோவன், எஸ் பி வேலுமணி, தங்கமணி, வெங்கடேஷ், முன்னாள் எம்எல்ஏ, யூனியன் சேர்மன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அவர்களுடைய பினாமி உள்ளிட்ட நபர்கள் இதில் வருகிறார்கள்.

கனகராஜ் சூட்கேஸ் கொடுத்தது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு வெங்கடேஷிடம் மூன்று, இளங்கோவினிடம் 2 கொடுத்ததாக தெரிவித்தார். இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு சம்மந்தம் உள்ளது என்றும் சொல்லி உள்ளேன் அது என்ன என்பது குறித்து விசாரித்து தெளிவுபடுத்தினால் போதும் என்று கூறினார். மேலும் கொடநாட்டில் இருந்து அவருடைய தம்பி கனகராஜ் சூட்கேசை எடுத்து வந்ததாக கூறிய அவர், பெருந்துறையில் தன் தம்பியை பார்த்ததாகவும், அப்போது அம்மாவிற்கும், சின்னம்மாவிற்கும் துரோகம் செய்துவிட்டாய் என்று கூறியதால் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் நிலவியதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விசாரணையில் நானும் சொல்ல வேண்டியுள்ளது, அவர்களும் கேட்க வேண்டியுள்ளது. விசாரணை செய்த அதிகாரிகள் நேர்மையாக இருந்தனர் எனக் கூறினார். மேலும், தன்னிடம் ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சந்தேகப்படும் நபர்களின் பெயர் பட்டியல் மட்டும் தான் இருந்தது அதை வழங்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு!