கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்.. வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு!

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்.. வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், புகார் கொடுத்தவர்கள் மீது கள்ளச்சாராய கும்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே கள்ளச்சாராய கும்பல் மீண்டும் அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கொட்டகைக்கு தீ வைத்தும், சாராய விற்பனைக்கு உடந்தையாக உள்ள வீட்டின் மீது கல் வீசியும் தாக்கினார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.