கார்த்திகை முதல் நாளிலேயே மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்...!

கார்த்திகை முதல் நாளான இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர மற்றும் மண்டல பூஜைக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடை திறக்கப்படும்.அதையொட்டி  ஐயப்பனை தரிசிக்க சபரி செல்வது வழக்கம். அதன்படி சென்னை, கோடம்பாக்கம், அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஐயப்பன் கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமியே ’’சரணம் ஐயப்பா’’ என்ற முழக்கங்களுடன் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் அதிகாலை முதலே குவிந்த ஐயப்ப பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் மலர்களை சிவபெருமானிடம் வைத்து பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து  நீலநிறம், கருப்புநிற ஆடைகளை உடுத்தி குருசாமிகளிடம் மாலை அணிந்து சபரிமலை செல்ல விரதத்தை துவக்கினர்.

கடலூர் ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே குழந்தைகள், கன்னி சாமிகள் என 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதேபோல் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே மணிமுக்தா ஆற்றில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆற்று விநாயகர் கோயிலில் மாலை அணிந்து கொண்டனர்.

சேலம் சாஸ்தா நகர் பகுதியில் அமைந்துள்ள ஐயப்ப ஆசிரமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதேபோல் திருவண்ணாமலை, திருச்சி , கரூர், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கி உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com