"குலக்கல்வி முறையை புகுத்த முயற்சிக்கிறது பாஜக" - கி.வீரமணி

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையை பாஜக அரசு புகுத்த முயற்சிப்பதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் திராவிட கழகத்தின் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்டு பேசிய கி.வீரமணி,
இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என மத்திய அரசு கூறுவதை நிறைவேற்ற முயற்சிக்காது என்று குற்றம் சாட்டியவர், வடிவேலு நகைச்சுவையை போல மகளிர் இடஒதுக்கீடு வரும் ஆனால் வராது என நகைச்சுவையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர், சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சாதிய பிரிவுகளின் அடிப்படையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை களைத்து சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என தெரிவித்தார். 

இதையும் படிக்க : காவலர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்களை, கொத்தாக தூக்கிய தனிப்படை!

மேலும், மகளிர் சம உரிமையை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்வதாகவும், அதனால் தான் மகளிர் உரிமைத்தொகை எனும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசியவர், ‘விஸ்வகர்மா யோஜனா' என்ற ஒன்றிய அரசின் திட்டம் மூலம் மீண்டும் குலக்கல்வி முறையை பாஜக அரசு புகுத்த முயற்சிப்பதாகவும், அதை ஒன்றிய அரசு உள்நோக்கத்துடன் கொண்டு வருவதாகவும், அதற்கு பாரம்பரிய தொழில் என புதிய பெயரை வைத்துள்ளதாகவும், இது போல உள்நோக்கத்துடன் செயல்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டம் என குற்றம் சாட்டினார்.