ஜே.பி.நட்டா கூறியது பொய்யின் உச்சம்...!விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள்...!!

ஜே.பி.நட்டா கூறியது பொய்யின் உச்சம்...!விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள்...!!
Published on
Updated on
1 min read

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில், 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாகக் கூறிய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது.

ஜே.பி.நட்டாவின் பேச்சு:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை மற்றும் சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்பட வில்லை. இந்நிலையில், 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரையில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடைந்த உடன் பிரதமர் மருத்துவமனையை திறந்து வைப்பார் என்றார். 

வேலை தொடங்கப்படாத எய்ம்ஸ்:

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான  ஒப்பந்தப் புள்ளியே கோரப்படாத நிலையில், பணிகள் முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார் என பா.ஜ.க. தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என விமர்சித்தார்.

பொய்யான தகவலை கூறிய ஜே.பி.நட்டா:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டதாக பொய்யான தகவல்களை அளித்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டி உள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை தெரிவித்தார். 

சமூக ஆர்வலர்கள் விமர்சனம்:

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மதுரை எய்ம்ஸ் குறித்த பேச்சு, திரைப்படம் ஒன்றில் தனது கிணற்றை காணோம் என காவல் நிலையத்தில் நடிகர் வடிவேலு புகார் அளிப்பது போன்று உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com