பாஜக-வினர் ஆன்டி இந்தியன்" திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கின்றனர்...தயாரிப்பாளர் புகார்....!!

மாரிதாஸ் விவகாரத்தில் கருத்து சுதந்திரத்தை பற்றிப் பேசும் பா.ஜ.க-வினர் "ஆன்டி இந்தியன்" திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்து கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவது ஏன் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக-வினர் ஆன்டி இந்தியன்" திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கின்றனர்...தயாரிப்பாளர் புகார்....!!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் "ஆன்டி இந்தியன்" திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வேண்டி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா புகார் ஒன்றை அளித்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஆதம்பாவா, தனது மூன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநர் புளூ சட்டை மாறன் (எ) இளமாறன் இயக்கி வெளியான "ஆண்ட்டி இந்தியன்" திரைப்படம் கடந்த 10- ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 240-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானதாக தெரிவித்தார்.

மேலும், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பார்வதி திரையரங்கில் அன்றிரவு 10 மணிக் காட்சி வெளியிட்டபோது அங்கு வந்த 10 க்கும் மேற்பட்ட சிலர் தங்களை பா.ஜ.க-வினர் எனக் கூறிக்கொண்டு திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், இது குறித்து திரையரங்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தபோது அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுத்தது, திரைப்பட பேனர்களை அத்துமீறி கழற்றி பார்வையாளர்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையிட்டு தணிக்கைக் குழுவின் சான்றிதழுடன் "ஆண்டி இந்தியன்" திரைப்படம் வெளியிட்டுள்ளதாகவும், அத்திரைப்படத்தை வெளியிட விடாமல் காவல் துறையினரே தடுப்பது சட்டத்துக்கு புறம்பானதாகும் எனவும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும்  தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் "ஆண்ட்டி இந்தியன்" திரைப்படத்தை திரையிட விடாமல் தடுப்பதால், திரைப்படக் குழுவினர் உள்பட பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், தமிழகம் முழுவதும் "ஆண்ட்டி இந்தியன்" திரைப்படம் திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறையினரின் அத்துமீறல்களை தடுத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்,

சுய விளம்பரத்துக்காகவும், பணம் பறிக்கும் நோக்கிலும் தங்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு, தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.