அரசு பணியில் பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை வரன்முறைப்படுத்த கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு பணியில், பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பணியில் பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை வரன்முறைப்படுத்த கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பும் வகையில் 2007ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலமாக  நியமிக்கப்பட்டு நீண்டகாலமாக பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர்கள் அனைவரும் தகுதியான கல்வி துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் முறையான தேர்வு நடைமுறையை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து, நீண்ட காலம் பணியாற்றியதற்காக பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், முறையாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால் தகுதியுடன் அரசு வேலைக்காக காத்திருப்போரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும்,  அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும் என்றும், பின் வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும்  வரன்முறைப்படுத்த கூடாது என்றார். அதேநேரம் மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com