உதகையில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை...!

உதகையில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை...!

உதகையில் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நாளை முதல் படப்பிடிப்புக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் என்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவது வழக்கம். அவர்களை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழ கண்காட்சி மற்றும் கோடை விழாக்கள் உள்ளிட்டவை சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு...தங்கம் தென்னரசுவின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை!

இந்நிலையில், நிகழ்வாண்டிற்கான கோடை விழா வருகிற மே மாதம் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
மேலும் , சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.