சி.பி.சி.எல் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு...கடலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல தடை...!

சி.பி.சி.எல் ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு...கடலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல தடை...!

நாகூரில், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கடியில் உள்ள குழாயில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல C.P.C.L. ஆலைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். 


நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்ததால் சுற்றுச்சூழல் மாசடைந்தது. இதனிடையே உடைந்த குழாயை சரி செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பீறிட்டு வெளியேறியது.

இதையும் படிக்க : அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஆகிறாரா ஈபிஎஸ்...? அதுவும் போட்டியின்றி.... ?

இதனால் அதிருப்தி அடைந்த மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் உள்ளிட்ட 7 கிராம மீனவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கச்சா எண்ணெய் குழாயை முறையாக சீரமைக்காத  சி.பி.சி.எல். நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குழாயை முற்றிலுமாக அகற்ற கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் வரும் 8-ம் தேதி ஆலையை முற்றுகையிடவும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மறு உத்தரவு வரும் வரை பைப் லைனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல சி.பி.சி.எல். ஆலைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அத்துடன், மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.