அரசு பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்...முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் தொடங்கவிருப்பதாக தகவல்!

அரசு பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்...முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் தொடங்கவிருப்பதாக தகவல்!

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபடும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்:

அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்தான காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என 110 விதிகளின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 

முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் தொடங்கவிருப்பதாக அறிவிப்பு:

இந்த நிலையில் முதற்கட்டமாக காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் 15 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 292 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகளில் சோதனை முறையில் திட்டத்தை தொடங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சத்துணவு கூடங்களில் காலை ஐந்தரை மணிக்கு சமையல் தொடங்கி, எட்டேகால் முதல் எட்டே முக்கால் மணிக்குள் மாணவர்களுக்கு உணவுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி:

தினமும் 10 முதல் 500 மாணவர்களுக்கான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான  பணிகளை அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.