
செஞ்சியில் உலகப் புகழ்பெற்ற ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த கோவிலில் கமலக்கண்ணி அம்மன் சிலை உள்ளது. இன்று காலை வழக்கம் போல் பூஜைக்கு சென்ற பூசாரி ராமச்சந்திரன், கோவில் சிலை உடைந்திருப்பது கவனித்தார். பின், செஞ்சி கோட்டை அலுவலருக்கும், அறங்காவலர் அரங்க ஏழுமலைக்கும் தகவல் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து செஞ்சி கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்பு செஞ்சி காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறங்காவலர் மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், நேற்று நள்ளிரவோ, இன்று அதிகாலையோ, யாரோ மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோட்டை கோவிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது இப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.