மதுபான ஆலை; வங்கிக் கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவு; தற்காலிக நிறுத்தம்!

மதுபான ஆலை; வங்கிக் கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவு; தற்காலிக நிறுத்தம்!

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்கும் மிடாஸ் மதுபான ஆலையின் வங்கி கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூரில் அமைந்துள்ள மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் என்கிற மதுபான தொழிற்சாலையின்  இயக்குனர் கே.கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள வழக்கில், கடந்த 2003ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தொழிற்சாலை, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்துவருவதாகவும், அதற்கான விற்பனைவரியை கடந்த நிதியாண்டு வரை முறையாக செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிதியாண்டில் விற்பனை வரியை செலுத்த தாமதம் ஏற்பட்ட நிலையில், உரிய மதிப்பீடுகளை ஏதும் கொடுக்காத வணிக வரித்துறையினர், தங்கள் நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வைத்துள்ள வங்கி கணக்கு மற்றும் தொழிற்சாலை அமைந்துள்ள நிலத்தை முடக்கி உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை பிடித்தம் செய்து வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்கான விற்பனை வரி 15 கோடியே 68 லட்ச ரூபாயை செலுத்திய நிலையிலும் முடக்கத்தை கைவிடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான பாக்கி தொகையை 15 நாட்களில் செலுத்திவிடுவதாகவும், அதன்பின்னர் அந்தந்த மாதங்களில் செலுத்துவிடுவதாகவும் உறுதி அளித்து ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கடுமையான நிதி நெருக்கடி, மூலப்பொருள் உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு, தொழிலாளர் தட்டுப்பாடு, கொரோனா காலகட்டம் போன்ற பல்வேறு இக்கட்டான காலகட்டத்திலும் கடந்த 20 ஆண்டுகளாக முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும், 11 மதுபான உற்பத்தி நிறுவனங்களால் மதுபானங்கள் சப்ளை செய்யக்கூடிய நிலையில், தங்கள் நிறுவனத்தை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாகவும், 2 ஆயிரம் குடும்பங்கள் தங்கள் நிறுவனத்தை நம்பி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் அளிக்க எந்தவிதமான வாய்ப்பும் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட முடக்க உத்தரவால், ஆலையை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இளந்தமிழ் ஆர்வலன் ஆஜராகி, நிலத்தை முடக்கம் செய்த உத்தரவு இயந்திரதனமாகவும், இயற்கை நீதிக்கு முரணாகவும் உள்ளதாக வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, மதுபானங்களை வாங்கியதற்கான தொகையில் ஒரு பகுதியை நிறுத்தி வைத்துள்ளதாலும், நிலம் முடக்கப்பட்டு உள்ளதாலும், மிடாஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கிய உத்தரவை நான்கு வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வங்கியிடம் தெரியப்படுத்தும்படி வணிக வரித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் வரி பாக்கிகள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மிடாஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு செலுத்த தவறினால் அந்த நிறுவனத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு தமிழக வரித்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை, மிடாஸ் நிறுவனத்தின் முடக்கப்பட்ட நிலத்தை விற்கும் நடவடிக்கைகளை தள்ளிவைக்க வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதையும் படிக்க:நாங்குநேரி சம்பவம்: "நான்கு அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போய்ட்டாங்க"...நடந்தது என்ன?