வண்டலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்தார் முதல்வர்!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்வான இளைஞர்களுக்கு  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

வண்டலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைத்தார் முதல்வர்!!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.  இதில் 500க்கு மேற்பட்ட முன்னணி தனியார்   நிறுவனங்கள் பங்கேற்று, 73 ஆயிரத்து 950 காலிப்பணியிடங்களை நிரப்பின. இந்த முகாமில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பணிக்கு தேர்வான முதல் 20 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து விழா மேடையில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக அரசு பணிகளுக்கென பல்வேறு தேர்வு முகமைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டுத்தேர்வுகளுக்கான பயிற்சி ஒளிப்பரப்பையும் தொடக்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பு தினசரி காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முகாமில் உணவு, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து செய்திருந்தன. மேலும் முகாமில் மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு, திறன் பயிற்சி மேற்கொள்வதற்கான பதிவு, அயல்நாட்டு வேலைக்கான பதிவு உள்ளிட்டவைகளுக்கென தனித்தனி அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.