உண்மையான தியாகிகளைப் போற்றுவோம்!- முதலமைச்சர் கடிதம்!

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உண்மையான தியாகிகளைப் போற்றுவோம்!- முதலமைச்சர் கடிதம்!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்ற உறுதிமொழியையும், உத்தரவாதத்தையும் வழங்குவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்,  இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள முதலமைச்சர், இது தமிழ்நாடு, இங்கே பாஜகவின் அரசியல் விளையாட்டு எடுபடாது என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம் என்றும்  தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம் என்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.